ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஐந்து வருடங்களின் பின்னர் ஒன்றுகூடுகிறது

201 0

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஐந்து வருடங்களின் பின்னர், கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில், இன்று (05) கூடவிருக்கிறது. கட்சியில், 3 பிரதித்தலைவர் பதவிகளையும் 3 உப-தலைவர் பதவிகளையும் உருவாக்குவதற்கான யோசனை இந்தக் கூட்டத்தின் போது, முன்வைக்கப்பட உள்ளதாக அறியமுடிகிறது.

அதனடிப்படையில், அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோரின் பெயர்கள் பிரதித் தலைவர்கள் பதவிக்குப் பரிந்துரைக்கப்படலாம் என்று அறியமுடிகிறது. இதேவேளை, அமைச்சர்களான மங்கள சமரவீர, ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரின் பெயர்கள் உப-தலைவர்கள் பதவிக்குப் பரிந்துரைக்கப்படலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம் மற்றும் பிரதி பொதுச் செயலாளராக சுஜீவ சேனசிங்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அறியமுடிகிறது.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நிறைவடையும் வரையிலும் கட்சியின் ஏனைய பதவிநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு கட்சி உயர்மட்டத்தினர் கலந்தாலோசித்துள்ளனர் என்றும் அறியமுடிகிறது.