பட்டதாரிகளின் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதியின் தலையீடு – இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கம் நன்றி தெரிவிப்பு

283 0

பட்டதாரிகளின் சிக்கல்கள் தொடர்பாக எப்பொழுதும் அவதானத்தை செலுத்தி வருவதுடன் அவற்றிற்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்தியமை தொடர்பில் இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினர் தமது நன்றிகளை ஜனாதிபதிக்கு தெரிவித்தனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.

இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினரால் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் கடிதங்களின் மூலமாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நிலவும் பொதுவான சிக்கல்கள் இதன்போது ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப் பட்டியல்களை துரிதமாகப் பெற்றுக்கொடுத்தல், 1999,2005 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை துரிதமாக அரச சேவையினுள் உள்ளீர்த்தல், கள உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்தல், அலுவலக தேவைகளுக்காக கணனி வசதிகளை பெற்றுக்கொடுத்தல், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைப்பரீட்சையின் கணினியறிவு தொடர்பான பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் ஏழாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குதல், முறையான பதவியுயர்வு முறையொன்றினை தயாரித்தல் மற்றும் முறையான இடமாற்ற முறையொன்றினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சேவையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய தரத்தைப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய பயிற்சி செயலமர்வுகளை நடத்துதல் தொடர்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் அவற்றை நடத்துவதற்கு பொது நிர்வாக அமைச்சினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

களனி பல்கலைக்கழகத்தின் செவிப்புல நிபுணர்களுக்கு அரச நியமனங்களை வழங்குதல் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

யாழ் மாவட்ட பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் பொருத்தமான முறையொன்றின் மூலமாக அதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

பேண்தகு அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவத்துறையை பிரபலப்படுத்துதல் தொடர்பாக கவனஞ் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான அறிக்கையொன்றினை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றங்களைப் பெற்றுக்கொடுக்கும்போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பை வழங்கும் வகையிலும், அவர்களது தனிப்பட்ட மேம்பாடு தொடர்பாகவும் கவனத்தில் கொண்டு இடமாற்றங்களை செயற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்