இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இஸ்திரமான தீர்வுகளை காணும் வகையில் இருநாட்டு அரசாங்கமும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருதரப்பு பேச்சுவாரத்தைகளை மேற்கொள்ளவுள்ளன. இந்நிலையில் இலங்கை -இந்திய கடற்படையினரின் பிரத்தியேக பேச்சுவாரத்தை ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளுக்கு அமைவான மீன்பிடி முறைமைகளை தடுக்க வேண்டும் என இலங்கை மீனவர் தொடர்ச்சியாக அரசாங்கத்தை வலியுறுத்தி வரும் நிலையில் சட்டவிரோத மற்றும் அத்துமீறிய மீன்பிடி முறைமைகளை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியிலும் இந்த ஆண்டு பெப்ரவரி மாதமும் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்தின் தலைமையில் இருநாட்டை உயர்மட்டகுழு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த பேச்சுவார்தைகளின் போது பொது இணக்கப்பாடுகள் சில மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய மீன்பிடி முறைமைகளை முற்றாக தடுத்தல் மற்றும் எல்லை தாண்டிய மீன்பிடி முறைமைகளை கண்காணிக்க இரு நாட்டு கடற்படை தொடர்ந்து ரோந்து நகர்வுகளை முன்னெடுக்கும் என்ற முக்கிய தீர்மானங்களை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. எனினும் கடந்த சில காலங்களின் மீண்டும் இந்த பிரச்சினைகள் தலைதூக்கியுள்ள நிலையிலும் அண்மையில் இந்திய மீனவர் ஒருவர் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் என்பன இரு நாடுகள் மத்தியில் மீண்டும் தளும்பல் நிலைமைகளை உருவாக்கியுள்ளன. இந் நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில் கடத்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இந்திய புது டெல்லிக்கு பயணம் செய்யவுள்ளனர். இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இஸ்திரமான தீர்மானங்களை இந்த பேச்சுவாரதையைல் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகளை சரியான முறையில் கையாளும் நகர்வுகளை முன்னெடுக்க இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனை எவ்வாறு கையாள்வது என்ற விடயம் தொடர்பிலும் கடற்படையினர் சாதகமானதும் மீனவர்களை பாதுகாக்கும் வகையிலான நகர்வுகளை கையாள்வது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய கடற்படை தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

