றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஜயராம் ட்ரொக்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம், தமது சேவையாளரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும் நோக்கிலே செயற்படுவதாக பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.
இதன்காரணமாகவே விசாரணைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் விசாரணைகள் காலதாமதம் ஆகின்றமை விசாரணை அதிகாரிகளின் பிரச்சினை அல்லவென அரச தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.
பிரதிவாதி பல வருடங்களாக வழக்கின் சாட்சிகளை மறைத்துள்ளதாகவும் அது தொடர்பில் உறுதிப்படுத்தி கொள்வதற்காக சில காலம் எடுக்கும் என்றும் அவர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.

