ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை சீனாவிடம் கையளிக்கவுள்ளமை இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தல்

214 0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை கையளிக்கவுள்ளமையானது இந்தியாவுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக புதுடில்லியைத் தளமாக கொண்ட கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் விசேட பேராசிரியரான ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

சீனாவின் நிதியில் பாரிய உட்கட்டமைப்பு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இலங்கை கடன்பொறியில் விழுந்துள்ளது.

கடனுக்குப் பங்குகள் என்ற அடிப்படையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை கையளிக்கவுள்ளமையானது, இந்தியாவுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் சவாலை புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், எந்தவொரு அயல் நாட்டுடனும் முரண்பாட்டுக் கொள்வது சரியானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு இந்தியா 15 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.

தமிழ் மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.

500 உழவு இயந்திரங்களையும், 10 ஆயிரம் ஈருருளிகளையும், 90 ஆயிரம் விவசாய கருவிகளையும், 200 கடற்றொழில் படகுகளையும், இந்தியா வழங்கியுள்ளது.

விமான நிலையங்களைப் புனரமைத்து, தொடருந்துப் பாதைகளை மீளமைத்துக் கொடுத்திருக்கிறது.

இலங்கையில், இந்தியா எதைச் செய்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்று பார்க்கலாம் என்று பேராசிரியர் ஜி. பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார்.