ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை கொலை செய்த படையினரை காப்பாற்றப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குருணாகல் பாதுகாப்புச் சேவை கல்லூரியின் மூன்று மாடிக் கட்டட அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்களை கொலை செய்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் படையினரை என்னால் காப்பாற்ற முடியாது.தேசிய பாதுகாப்புக்கு தொடர்புபடாத வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க முடியாது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்ட படை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கும்.
தாய்நாட்டை பாதுகாத்த படைவீரர்களை பாதுகாக்கும் கடப்பாடும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டு.பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் எனது கடமைகளை ஒரு போதும் புறந்தள்ளப் போவதில்லை.தற்போது இலங்கைக்கு சர்வதேச சமூகத்தில் இலங்கைக்கு சிறந்த நன்மதிப்பு காணப்படுகின்றது. இந்த நன்மதிப்பு மூலம் நாட்டுக்கு என்ன நன்மை என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
நன்மதிப்பினையும் உலக நாடுகளுடனான நட்புறவையும் பயன்படுத்தி எமது படைவீரர்களை நாம் பாதுகாக்கின்றோம்.உலகின் பலம்பொருந்திய நாடுகளின் தலைவர்கள் இலங்கையின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் படைவீரர் பிரச்சினைகளின் போது ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

