நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என சிறைச்சாலை மருத்துவமனையின் பிரதான மருத்துவ அதிகாரி, கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
தற்போது சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விமல் வீரவங்சவின் மருத்துவ அறிக்கையை முன்வைத்து நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸமில் இற்கு லஞ்சம் பெற்று கொடுக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 18 ஆவது சாட்சியாளராக விமல் வீரவங்ச இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகயிருந்தார்.
இந்நிலையில், விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவங்ச உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் மருத்துவ பரிந்துரைக்கு அமைய நேற்று வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

