அர்ஜுன மகேந்திரன் இரண்டாம் நாளாக முறிவிநியோக விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

239 0
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், இரண்டாம் நாளாக இன்றையதினம் சர்ச்சைக்குரிய முறிவிநியோக விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
முறிவிநியோகத்தின் போது ஏற்பட்டதாக கூறப்படும் முறைக்கேடு குறித்து வாக்கு மூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை 9.30 அளவில் குறித்த ஆணைக்குழுவிற்கு பிரவேசித்தார்.
இந்த விசாரணைகள் இன்று மாலை வரையில் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த போது, பதவி நீக்கப்படட அரச கடன் திணைக்களத்தின் அதிகாரி ஜீ.ஆர்.டி. நாணயக்காரவும் இன்று குறித்த ஆணைக்குழுவில் வாக்கு மூலம் வழங்கினார்.
இதன்போது மத்திய வங்கியின் முறிவிநியோகத்துக்கான வர்த்தமானி, காலாகாலமாக முன்கூட்டிய தினத்திலேயே வெளியிடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் முன்னாள் தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க இன்று பாரிய மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானதுடன், அவரிடம் 3 மணி நேர விசாரணை இடம்பெற்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, மகிந்த ராஜபக்ஷவுக்காக 81 லட்சம் ரூபாய் அரச நிதியை ஒதுக்கி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தமை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்துக்கு 50 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவரிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டன.
இதேவேளை, அதி சொகுசு வாகன அனுமதி பத்திரத்தை 5 வருடங்களுக்குள் பெற்றுத் தருவதாக கூறி, 54 லட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் ராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் இன்னுமொருவருக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல செய்த வழக்கின் சாட்சி விசாரணை இந்த மாதம் 19ம் திகதி முதல் நாளாந்தம் நடைபெறவுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இதனை இன்று அறிவித்தது.
குறித்த விசாரணை தினங்களில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முறைப்பாட்டின் சாட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.