சர்வதேச நாணய நிதியத்திற்கு ஊழல் எதிர்ப்பு குரல் சிவப்பு எச்சரிக்கை(காணொளி)

339 0

சர்வதேச நாணய நிதியத்திற்கு ஊழல் எதிர்ப்பு குரல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்காவிலுள்ள பொதுச் சொத்துக்களை விற்பனை செய்யுமாறு கூறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு அருகதையில்லை என்று ஊழல் எதிர்ப்பு குரல் என்ற சிவில் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திலிருந்த பொதுச் சொத்துக்களை விற்பனை செய்பவர்களுடன் இணைந்து ரணில், மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் சொத்துக்களை விற்பனை செய்யும் விளையாட்டை ஆரம்பித்திருப்பதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

நாட்டின் மீது காணப்படுகின்ற கடன் அளவுகளை குறைப்பதற்கு அல்லது நிர்வகிப்பதற்கு அரச சொத்துக்களை விற்பனை செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாக ஊடகங்களில் கடந்த வார இறுதியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு குரல் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் இந்தப் பரிந்துரைகள் தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

ஊழல் எதிர்ப்பு குரல் – சுமார் 80 இலட்சத்திற்கு விற்பனை செய்ய வேண்டியதை வெறும் 4 இலட்சங்களுக்கு வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இது மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் நட்டத்தை ஏற்படுத்தும் கோட்பாடு எனவும் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கோட்பாடு நாட்டிற்கும், மக்களுக்கும் பொரும் நட்டத்தை ஏற்படுத்தும் ரணில் மற்றும் கருணாநாயக்கவின் வங்குரோத்து கோட்பாடு. எனவே இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கையை எடுப்பதற்கு தாங்கள் ஆயத்தமாகி வருவதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான ஆவணங்களையும் தயார்படுத்திவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நம்நாட்டு சொத்துக்களை விற்;பனை செய்யுமாறு சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கு கூற அருகதையில்லை எனவும் அதுபோன்று பொது மக்களின் பணத்தை சூறையாடி ஏப்பமிட்டவர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணை செய்ய பின்வாங்க வேண்டாமென பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவினருக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் இருந்த சில மோசடிகாரர்கள் இந்த அரசாங்கத்திலும் இருப்பதால் கடந்த ஆட்சியிலிருந்த விளையாட்டுக்களை ஆரம்பிக்க எத்தனிக்கின்றனர் எனவும் இதற்கெதிராக தாங்கள் குரல் கொடுப்போம் என்றும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.