வவுனிக்குளத்தில் நீர் பற்றாக்குறை

67 0

வவுனிக்குளத்தில் நீர்வரத்து இல்லாத நிலையில் 204 ஏக்கரில் நெற்செய்கையினை மேற்கொள்ள வவுனிக்குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்திலே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு வவுனிக்குளத்தின் கீழான சிறுபோக செய்கையில் நெல் 204 ஏக்கர் அளவிலும் சிறுதானியம் 400 ஏக்கர் அளவிலும் பயிர்செய்ய தீர்மானத்தின் அடிப்படையில் இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் இரண்டு நீர்பாசன திணைக்களங்களில் ஒன்றான வவுனிக்குள நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களுக்குமான போதிய நீர் இல்லாத நிலை காணப்படுகின்றது.

முத்தையன் கட்டு நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்களுக்கு போதிய நீர்வரத்து காணப்பட்டுள்ள நிலையில் அதிகளவில் விவசாயிகள் நெற்செய்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தற்போது சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளார்கள் இந்த நிலையில் வவுனிக்குளத்தின் கீழ் 6060 ஏக்கர் நெற்செய்கை காணிகள் பதிவில் காணப்பட்ட போதும் குளத்தின் நீர்மட்டம் தற்போது 12.5 அடியாக காணப்படுகின்றது.

நாட்டில் பொருளாதார நிலை காரணமாக விவசாயிகள் பல்வேறு இடர்களை எதிர்கொண்டுள்ள நிலையில் வவுனிக்குளத்தின் கீழான விவசாய செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இயற்கை பெரும் ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது.

வவுனிக்குளத்தில் நீர் திறந்துவிடும் மூன்று கொட்டுகள் காணப்படுகின்றன. அதில் மத்திய பகுதியில் அமைந்துள்ள கொட்டின் கீழ் 204 ஏக்கர் நெற்செய்கையினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருதால் ஏனைய விவசாயிகளின் விவசாய காணிகளில் இந்த முறை சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.