அரிசிக்கு தட்டுப்பாடு: கோதுமை விற்பனை அதிகரிப்பு

350 0

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் கோதுமை மாவின் விற்பனை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் பந்துல ஜயமான இதனை தெரிவித்துள்ளார்.அரிசியின் விற்பனை தற்போது குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக எமது செய்தி சேவை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினவியது

அதற்கு பதிலளித்த அதன் பேச்சாளர் ஒருவர், வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விற்பனை 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அரிசியின் விலை அதிகரித்தமையே அதற்கான காரணம் என வர்த்தகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரிசியின் விலை அதிகரிப்பு மற்றும் அரிசிக்கான கட்டுப்பாடு காரணமாக கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பீ.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தற்போது அரிசிக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக சிறப்பு அங்காடிகளில் மாத்திரம் அரிசி விற்பனை செய்யப்பட்டதுடன் தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.