கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கையை அரசு புரிந்து செயற்படவேண்டும் – மௌளவி சுபியான்

257 0
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த பதினைந்து நாட்களாக கேப்பாப்பிலவு பகுதி மக்களினால்   தங்களது சொந்தக் காணியின் உரிமைக்காக ஜனநாயக வழியில்  நடாத்தப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாகும்   என  மக்கள் பணிமனை  தலைவரும் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினருமான மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் தனது ஊடக அறிக்கையில்கேப்பாப்பிளவு பகுதி மக்களினால் மேற்கொள்ளப்படும்     இந்த நியாயமான கோரிக்கைக்கு இன்றைய நல்லாட்சி அரசாங்கம் நிச்சயமாக செவிசாய்க்கவே வேண்டும். இன்னும் காலம் தாழ்த்தாமல் ஜனாதிபதியும், பிரதமரும் இவ்விடயத்தில் நேரடிக் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோருவதுடன் இம் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
உண்மையில் இம் மக்களின் போராட்டம் சுயாதீனமானது. எந்தப் பின்னணியையும் கொண்டதாகத் தெரியவில்லை. எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தங்களுடைய குடும்பத்துடனேயே காணிச் சொந்தக்காரர்கள் வந்திருந்து தங்களுக்கு இந்த நல்லாட்சியில் நிச்சயமாக நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.
பச்சிளம் குழந்தைகளும், பிள்ளைகளும், வயோதிபர்களும் இந்தப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கெடுத்துள்ளனர். சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். தங்களுக்கு இப் போராட்டத்தில் நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் தங்களது போராட்டத்தின் வடிவங்களை மாற்றி தொடர்ந்து ஜனநாயக வழியில் போராடுவதற்குள்ள மன வலிமையுடன் இம் மக்கள் இருப்பதாகவே தெரிகின்றது.
எனவே இவர்களின் இச் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு மனித நேயத்துடன் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் பணிமனையின் ஆதரவைத் தருவதுடன் இவர்களின் கோரிக்கையை ஏற்று இவர்களது காணியை இவர்களுக்கு வழங்கி இம் மக்களை சகல அடிப்படை வசதிகளுடன் அப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் இது போன்ற தனியார் பொதுமக்கள் காணிகள் இலங்கை பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் பயன்பாட்டில் இருந்தால் அவற்றை பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதியையும், பிரதமரையும்,  அரசாங்கத்தையும்  கேட்பதாக அவர் மேலும் கூறினார்