இலங்கை ஊடாக கடத்தப்பட்ட 3,019 சிவப்பு காது வாஸ்து ஆமைகள் பறிமுதல்

232 0
இலங்கை ஊடாக விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 3,019 சிவப்பு காது வாஸ்து ஆமைகள் பறிமுதல் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன.

பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக நேற்று அதிகாலை 03.30 அளவில் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த, விமானத்தில் 149 பேர் வந்து இறங்கினர். சுங்க அதிகாரிகள், அவர்களை கண்காணித்து, சந்தேகப்படும்படி உள்ளவர்களிடம் சோதனை நடத்தினர்.

இதில், சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் (32) என்பவர் ஹொங்கொங்குக்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பினார். அவரிடம் விசாரித்த போது, சுங்க தீர்வை செலுத்துவதற்கான எந்த பொருளும் இல்லை என கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார்.

எனினும் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சதீஷ்குமாரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மற்றொரு பையை திறந்து பார்த்தபோது, சிவப்பு காது அலங்கார கடல் ஆமைகள் ஏராளமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மொத்தம் 3,019 ஆமைகள் இருந்தன. இதன் மதிப்பு ₹6 இலட்சத்து 3 ஆயிரத்து 800. இந்த ஆமை இந்தியாவில் ₹1200க்கு விற்பனை செய்யப்படும். இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரித்தனர்.

இந்த ஆமைகளை செல்வந்தர்கள், தங்களது வீடுகளில் உள்ள அலங்கார மீன் தொட்டிகள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் வளர்ப்பார்கள். இது அதிர்ஷ்டமான உயிரினம். காலையில் எழுந்தவுடன் இந்த ஆமையை பார்த்தால், அதிர்ஷ்டம் அதிகளவில் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இதையடுத்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள வன உயிரின குற்ற காப்பகத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வன அதிகாரிகள் இந்த ஆமை இந்திய உயிரினம் கிடையாது. இதனால், நாங்கள் வழக்கு தொடர முடியாது. இதுபோன்ற உயிரினங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதற்கு முன், உலக சுகாதார நிறுவனத்திடம், பரிசோதனை செய்து, நோய் கிருமிகள் இல்லை என உறுதிப்படுத்தி, முறையான தடையில்லா சான்றுடன் கொண்டு வரவேண்டும்.

ஆனால், அதுபோன்ற சான்றிதழ் எதுவும் கொண்டு வரவில்லை. மேலும், இந்த உயிரினத்தை நம் நாட்டில் அனுமதிக்க, மத்திய வன உயிரின துறை தடை விதித்துள்ளது. இவற்றை இந்தியாவுக்குள் அனுமதித்தால், நம் நாட்டின் நீர் வளம் மாசுப்படும். எனவே, இந்த ஆமைகளை இந்தியாவுக்குள் அனுமதிக்க கூடாது. வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்ப வேண்டும் என கூறிவிட்டு சென்றனர்.

இதையடுத்து அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளை இன்று அதிகாலையில், கொழும்பு வழியாக பாங்காக் செல்லும் விமானத்தில் அனுப்ப முடிவு செய்தனர். இதற்கிடையில், சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்தனர் என, தமிழக ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது.

அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, ஏற்கனவே பலமுறை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பாங்காக் உள்பட பல நாடுகளுக்கு சுற்றுலா பயணியாக சென்று வந்துள்ளதாக தெரியவந்தது.