கருணாவின் புதிய அரசியல் கட்சிக்குள் மஹிந்த!

221 0

கடந்த அரசாங்கத்தின் போது பிரதியமைச்சராக செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று முன்தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த அரசியல் கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் ஒப்பந்தங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த கட்சி ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் புதிய கட்சிக்காக செயலாளர் உட்பட அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டனர்.அதற்கமைய தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய கட்சிக்கு செயலாளராக டீ.விமலதாஸ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் அமைப்பு தலைவராக செயற்படுவார்.

எதிர்வரும் காலங்களில் இந்த கட்சியை பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் மக்களுக்காக முழுமையான சேவை நிறைவேற்றுவதற்கு தான் எதிர்பார்ப்பதாக கருணா குறிப்பிட்டிருந்தார்.மஹிந்தவின் அரசியல் தோல்வியின் பின்னர் கருணா கடந்த இரண்டு வருடங்களாக காணாமல் போயிருந்தார்.

எனினும் அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு பேரணியில் கருணா பங்கேற்றார். அங்கு உரையாற்றிய கருணா, முன்னாள் ஜனாதிபதியின் பெருமைகளை துதிபாடியதுடன் பெரும்பான்மையின மக்களின் கைதட்டல்களையும் பெற்றுக்கொண்டார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசியதாக கருணா குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் கருணாவின் புதிய கட்சி உதயமாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.