ஐ.நா.வின் மேற்பார்வை அவசியம் என்கிறார் சம்பந்தன்!

251 0

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலதிக காலஅவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ள நிலையில், அவ்வாறு கால அவகாசம் வழங்குவதாயின், ஐ.நா மேற்பார்வை அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த காலஅவகாசம் கோரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார்.

அதேவேளை, ஐ.நாவிடம் 18 மாத காலஅவகாசத்தைக் கோருவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து அமெரிக்கா, இந்தியாவிடம் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்குவதாயின், ஐ.நாவின் மேற்பார்வை அவசியம் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விடயத்தில், இலங்கை அரசாங்கம் பின்வாங்குகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிக்கு மாறான – இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம் கோரும் கால அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வழங்குவதாயின், உறுதிமொழிகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை ஐ.நா மேற்பார்வை செய்யும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதும், அவர்கள் திருப்தி அடையவேண்டும் என்பதுமே 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நோக்கம்.

வடக்கு, கிழக்கில் காணாமல் போன தமிழர்கள், நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள், காணி அபகரிப்புக்கள் உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை.

இவ்வாறான சூழலில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதாயின் அதற்கு ஐ.நாவின் மேற்பார்வை அவசியம் என்ற விடயத்தில் தாம் உறுதியாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.