195ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

202 0

இராகலை – சென்லெனாஸ் தோட்டத்தில் உள்ள 195ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 08.00 மணிமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத் தோட்டத்தில் உள்ள 75 குடும்பங்கள் 06 வருட காலமாக வீடுகள் இல்லாமல் தற்காலிக இடங்களில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, தமக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டுமென பல தடவைகள் தோட்ட அதிகாரிகளிடம் கோரிய போதிலும், நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவித்தே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதேவளை, கடந்த வாரம் 35 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக கூறி, நிலத்தினை அளவிடுவதற்காக சம்பந்தப்பட்ட குடும்பங்களிடமிருந்து, 1500 ரூபா விகிதம், தோட்ட நிர்வாகம் பணம் பெற்றதாகவும், எனினும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், பலமுறை வீடுகள் இல்லாதவர்களின் பெயர் பட்டியலை தோட்ட நிர்வாகம் சேகரித்தாலும் அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஒரு வீட்டில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில், இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வாழ்வதாகவும் இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கவேண்டிய சூழ் நிலையில் இருப்பதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்க அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், அவர்கள் இதனை கண்டுகொள்வதில்லை, எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.