பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கின்றதா, இல்லையா என்பது தொடர்பிலேயே அரசியலில் பேதம் இருக்க வேண்டுமே தவிர, இன மற்றும் மதவாத அடிப்படையில் பேதம் இருக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சாரணர் இயக்கத்தின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனவாதம் மற்றும் மதவாதம் இன்றி, இலங்கையர் என்ற அடையாளத்துடன் முன்னோக்கிச் செல்லும் நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அனைத்து மகளிர் பாடசாலைகளிலும், சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் சாரணர் இயக்கத்தை நாடுமுழுவதும் கொண்டு செல்வது தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சாரணர் இயக்க பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

