தமிழ் மக்களுக்கு கிடைக்கும் சமஸ்டியை ஒத்த சமஸ்டி முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அவர்களுக்கு என்ன தேவையென்பதை அவர்களே வெளிப்படுத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று மாலை தமிழ் மக்கள் பேரவைக்கும் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல்கள் சம்மேளனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், எழுக தமிழிற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. கிழக்கில் எழுக தமிழ் நடைபெறுவதை தடுக்க பலர் மும்முரமாக இருந்தனர். அதனை முறியடித்து மக்கள் பெருமளவில் வருகைதந்தது எமது மக்கள் தொடர்பான நடவடிக்கைகள் சரியான திசையில் சென்றுகொண்டிருக்கின்றது என்பதில் ஊக்கத்தினையும் உற்சாகத்தினையும் தந்துள்ளது.
இந்த நாட்டில் உள்ள அரசாங்கங்கள் நெருக்குதல்கள் வழங்கும் போதே, எதையாவது வழங்க முற்படுகின்றனர். மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது, சௌமியமூர்த்தி தொண்டமான் தொழிற்சங்கத்தின் பலத்தினை பாவித்து நெருக்குதல் கொடுத்து தங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொண்டார்.
நாங்கள் எந்தளவுக்கு தமிழ் – முஸ்லிம் மக்கள் இணைந்து எமது எண்ணப்பாடுகளை அரசாங்கத்திற்கு தெரிவிக்கின்றோமோ அந்தளவுக்கு நெருக்குதலாக அமையும் என்பது எமது எதிர்பார்ப்பு. இன்று எமது பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு என்ன நடந்தாலும் அங்கு தெரிந்துவிடும் என்ற நெருக்குதல் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்றது. அரசாங்கத்திடம் கேள்விகள் எழுப்பப்படுகின்றது. இங்கு நெருக்குதல்களை ஏற்படுத்தும் போது சர்வதேச ரீதியில் ஒரு நெருக்குதலை வழங்குவதற்கான நிலையேற்பட்டுள்ளது.
தீர்வுத் திட்டத்தினை வழங்கப்போதாக பேச்சளவில் மட்டும் கூறுவதினால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. 18 தடவைகள் தமிழ் தலைமைகளுடன் மஹிந்த ராஜபக்ஷ பேசினார்கள். அந்த பேச்சுவார்த்தையின் பெறுபேறுகள் தொடர்பில் யாருக்குமும் எதுவும் தெரியாது.
ஜனாதிபதிக்கு எதிராக நாங்கள் எதனையும் சொல்லவில்லை. அவர் ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்ககூடும். ஆனால் தற்போதைய நிலையினையும் ஜெனிவாவினையும் எடுத்துப் பார்க்க வேண்டியவையாகவுள்ளது. எதிர்வரும் நாட்களில் ஜெனிவாவுக்கு சென்று நாங்கள் வேலை திட்டங்களை செய்கின்றோம் இன்னும் இரண்டு வருடங்கள் தாருங்கள் என்று கேட்பதற்கான அடிகோலும் நடவடிக்கையாக இருக்கலாம்.
கேப்பாபுலவு மக்களுக்கு சிங்கள அமைப்பு ஒன்று ஆதரவு தெரிவித்துள்ளது. இது நல்ல விடயமாகும். எங்களது பாதிப்புகளை, எங்களது பிரச்சினைகளை தெரிந்துகொண்டு சிங்கள மக்கள் குரல்கொடுக்க முன்வருகின்றார்கள் என்றால் முன்னர் போன்று இல்லாமல் சிங்கள மக்கள் எமது பிரச்சினைகளை தெரிந்து வைத்திருக்கும் நிலையேற்பட்டுள்ளது.
மூவர் இணைந்து பிரச்சினைகளுக்கு தேவையான நடவடிக்கையினை எடுக்கும் காலகட்டம் ஏற்பட்டுள்ளது.
கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தலைமைத்துவங்கள் தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். கேப்பாபுலவில் உள்ள படைத்தரப்பினரை அரசாங்கம் திருப்பியழைக்க முடியாது என்ற எண்ணத்தில் இருந்தால், நாங்கள் எதனைச் செய்தாலும் நடைபெறாது.

