இலங்கையை பிரிக்க முயற்சித்தால்……….(காணொளி)

269 0

இலங்கையை பிரிக்க முயற்சித்தால் நாட்டின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாகிவிடும் என்று தென்னிலைங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவை சந்திப்பதற்காக, கொழும்பில் உள்ள சில பௌத்த பிக்குகள் ருக்மலே தம்மகீர்த்தி தேரர் தலைமையில் வெலிக்கடை சிறைக்கு இன்று காலை விஜயம் செய்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ருக்மலே தம்மகீர்த்தி தேரர், அரசாங்கத்திற்கு இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சமஷ்டி தீர்வென்பது நாட்டைப் பிரிக்கும் செயற்பாடு இல்லை என்று அடித்துக் கூறினாலும் அதன் பின்னணியில் நாட்டைக் கூறுபோடும் சூழ்ச்சியே இடம்பெறுவதாக ருக்மலே தம்மகீர்த்தி தேரர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பதவியிலிருந்த காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் விமல் வீரவன்ச கைது

சமஷ்டி தீர்வென்பது நாட்டைப் பிளவுபடுத்தாது என்று அவர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த நாட்டைப் பிரிக்கவே முயற்சிக்கின்றனர் என்பதை நாங்கள் அறிவோம். இந்த நாட்டைப் பிரிப்பதற்கே இந்த நாட்டிலுள்ள தலைவர்களும் முயற்சிக்கின்றனர். இருப்பினும் நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இரகசியமாக இந்த முயற்சியை மேற்கொண்டாலும் அரசியலில் இல்லாத அனைத்து மகாநாயகர்களும் விழித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அனைத்து மகாநாயகர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு பாடம்புகட்டுவோம்.

எமது உயிரைத் தியாகம் செய்த பின்னரே இந்நாட்டைப் பிரிக்க முடியும்.மகாநாயகர்களும், இளைய பிக்குகளும் பின்வாங்க மாட்டார்கள்.
கோரிக்கைகளை முன்வைக்கும் இளைஞர்களை கைது செய்கின்றனர். அவர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் நடத்தப்படுகிறது.
அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்கின்றது.

இந்த நிலை தொடர்ந்து சென்றால் மிகவும் பயங்கரமான சூழ்நிலையே இந்த நாட்டில் ஏற்படும். வடக்கு, கிழக்கு ஒன்றிணைந்து செயற்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த நாட்டில் வாழும் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும். எனினும் இந்த நாட்டைப் பிரிக்கும் செயற்பாட்டிற்கு எதிராகவே நாங்கள் அணிதிரண்டு எதிர்க்கின்றோம் என்று ருக்மலே தம்மகீர்த்தி தேரர் தெரிவித்தார்