அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய, பிராந்திய உறவுகள் சம்பந்தமான பொதுக்கலந்துரையாடல்!

363 0

அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய, பிராந்திய உறவுகள் சம்பந்தமான அறிக்கை பற்றிய பொதுக் கலந்துரையாடல் இன்றைய தினம் யாழில்நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் விக்டோரியா வீதியில் அமைந்துள்ள சுபாஷ் விருந்தினர் விடுதியில் சட்டத்தரணி குமரேசன் புரந்ததன் தலைமையில் காலை 10.30 மணியவில் நடைபெற்றது.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட, அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய, பிராந்திய உறவுகள் சம்பந்தமான அறிக்கையில் உள்வாங்கப்பட்ட தனிநபர், சமுதாயம் சார்ந்த விடயங்கள் மற்றும் குறித்த அறிக்கையில் உள்வாங்கப்பட்ட சர்வ கட்சி பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை அனைத்து மக்கள் சார்ந்த பிரிவினருக்கும் தெளிவுபடுத்தும் நிகழ்வாக இது அமைந்திருந்தது.

இலங்கை அரசானது பல தடவைகள் 3ம் குடியரசு அரசியல் அமைப்புச் சட்டத்தை வரைவதில் 1990 ம் ஆண்டு காலப்பகுதியின் நடுப்பகுதி தொடக்கம் ஈடுபட்டுள்ளது. ஆனால் குறித்த அரசியல் அமைப்பு சட்டமானது அதிகாரப் பகிர்வையே மையப்படுத்தி வரையப்பட்டன. ஆனால், 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட, அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய, பிராந்திய உறவுகள் சம்பந்தமான அறிக்கையில் அனைவருக்கும் பயன் கிடைக்கும் வகையில் குறிப்பாக மக்கள் நலன் சார்ந்த விடயங்களை புலப்படுத்தும் அறிக்கையாக அமைந்திருந்தது. ஆகவே குறித்த அறிக்கை தொடர்பான விடயங்கள் குறித்து பல்வேறுபட்ட தரப்பினர்களுடனும் இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வின் வளவாளர்களாக அரசியல் அமைப்பு சட்ட சபையின் செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,பேராதனை பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் சேனாரத்தின, யாழ். பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும் நிகழ்வில் யாழ். மாவட்ட சட்டத்தரணிகள், பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.