கொட்டாஞ்சேனையில் கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் துப்பாக்கி முனையில் பாரிய கொள்ளை

161 0

கொட்டாஞ்சேனை – சென். பெனடிக் வீதியில்  கோடீஸ்வர தரை ஓடு வர்த்தகரின் வீட்டுக்குள் பொலிஸார் என அடையாளப் படுத்திக்கொண்டு நுழைந்தோரால் சுமார் இரண்டரை கோடி ரூபா வரை பெறுமதி மிக்க தங்க நகைகள், பணம்  கொள்ளையிடப்பட்டுய்ள்ளது.

இது தொடர்பில் 08 ஆம் திகதி முற்பகல் 11.10 மணியளவில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு முறைப்பாட்டு கிடைக்கப் பெற்றதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கேசரிக்கு தெரிவித்தார்.

கார் ஒன்றில் வந்த இருவர் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்து தாப்பிச் சென்றுள்ளதாக கூறும் பொலிஸார், சந்தேக நபர்களைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்களை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,

08 ஆம் திகதி முற்பகல் வேளை கார் ஒன்றில் இருவர் கொட்டாஞ்சேனை சென் பெனடிக் வீதியில் உள்ள குறித்த தரை ஓடு வர்த்தகரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் அணியும் சீருடையையொத்த ஒரு வகை ஆடையில் இருந்துள்ளதுடன், தம்மை பொலிஸார் என அடையாளம் காட்டிக்கொண்டுள்ளனர். அவர்கள் கைகளில் கை விலங்கும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந் நிலையில் அவ்விருவரும் குறித்த வீட்டுக்குள் நுழைந்த போது, வீட்டில் வர்த்தகரின் மனைவியும், அங்கு தங்கியிருந்த யுவதி ஒருவரும் மட்டுமே இருந்துள்ளனர்.

இதன்போது மோசடி சம்பவம் ஒன்றை மையப்படுத்திய விசாரணைக்காக தாங்கள் வந்ததாக கூறிக்கொண்டுள்ள கொள்ளையர்கள், வீட்டுக்கு குறித்த வர்த்தகரையும் அவர் மனைவி ஊடாக வர வழைத்துள்ளனர்.

பின்னர் அவரும் அங்கு வந்ததும், பொலிஸாரை போன்று பாசாங்கு செய்து, சொத்து விபரங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததாக கூறப்படுகின்றது.

அதன் பின்னர் திடீரென, வர்த்தகரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி அவரை ஓர் அறையில் அடைத்துவிட்டு, வர்த்தகரின் மனைவி, யுவதியை கட்டிப்போட்டுவிட்டு, அங்கிருந்து தங்கம், பணம் என்பவற்றை கொளையிட்டு, பயணப் பொதியில் எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச்  சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த வர்த்தகர் பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிசார், கொள்ளையர்கள் என சந்தேகிக்கும் இருவரையும், அவர்கள் வந்த கார் தொடர்பிலும் சி.சி.ரி.வி. காணொளிகள் ஊடாக தகவல்களைப் பெற்று அறிவியல் தடயங்களை வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.