அவசர கால நிலையை உடன் நீக்குமாறு வலியுறுத்தி ஐ.ம.ச. பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

109 0

அவசர கால நிலைமையை உடன் நீக்குமாறும் , அரச அடக்கு முறைகளை நிறுத்துமாறும் வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,

அவசரகால நிலைமையை உபயோகித்து தற்போதைய அரசாங்கம் இளைஞர்களை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படவுள்ளது. உலக இளைஞர்கள் தினத்தில் இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை இளைஞர்களால் நிரப்புவதற்காக அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

கோட்ட கோ கமவில் நூலகத்தை நிறுவிய இளைஞர்களுக்கு எதிராக அரச மிலேச்சதனத்தை செயற்படுத்தும் இந்த அரசாங்கம் , அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். எமது கூட்டணி இளைஞர்களுக்கு எதிரான இந்த பழிவாங்கலுக்கு எதிராக குரல் கொடுக்கும்.

உடன் அமுலாகும் வகையில் அவசரகால நிலைமையை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அத்தோடு இரகசியமான முறையில் இளைஞர்களை காணாமல் ஆக்குவதை நிறுத்துமாறும் வலியுறுத்துகின்றோம். நிராயுதபாணிகளான இளைஞர்களை கைது செய்வதை நிறுத்தி , ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்