காணாமல் போனோர் விடயம் – பதில் வழங்குவதற்கு அரசாங்கம் கால அவகாசம்.

360 0

காணாமல் போனோர் விடயத்தில் பதில் வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்வரும் திங்கட் கிழமை வரையில் கால அவகாசம் கோரியுள்ளது.

மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வவுனியாவில் கடந்தமாதம் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்புக்கு ஒழுங்கு செய்துத் தருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.

இதன்படி நேற்றைய சந்திப்பு நடைபெற்றிருந்த போதும், அதில் ஜனாதிபதியோ பிரதமரோ பங்குபற்றி இருக்கவில்லை.

நீதி அமைச்சர், சட்ட ஒழுங்குகள் அமைச்சர் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு ராஜாஙக அமைச்சர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் காணாமல் போனோர் விடயத்தில் விசாரணை நடத்துமாறு காவற்துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை பதில் வழங்க முடியும் என்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.