பறிக்கப்பட்ட அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும்! – ஜயம்பதி விக்ரமரட்ன

202 0

வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக பறிக்கப்பட்ட, மாகாணசபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும், மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த ஆட்சியின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பிரயோகித்து மாகாணசபைகள் பலவீனப்படுத்தப்பட்டன. அரசாங்கத்தின் கரத்தை பலப்படுத்துகிறோம் என்ற போர்வையில் எதிரணியிலிருந்து உறுப்பினர்கள் வளைத்துப்போடப்பட்டனர். அவர்களைப் பயன்படுத்தியே மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கு பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்கவும், கிராம அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திவிநெகும சட்டத்தின் ஊடாக அவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.என்றும் அவர் குறிப்பிட்டார்.