13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லமாட்டோம்! – லக்ஷ்மன் கிரியல்ல

239 0

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும். அதற்கும் அப்பால் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லையென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அதன் பின்னரே சர்வஜன வாக்கெடுப்பு பற்றி தீர்மானிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
வாய்மூல விடைக்காக விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் கிரியல்ல இதனைத் தெரிவித்தார். புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார். இது அரசின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடா என விமல் வீரவன்ச எம்பி வினவினார்.

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்: புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு இது உட்படுத்தப்படும். எனவே, அவரின் கருத்தை அரசு ஏற்கின்றது. சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பும் பெறப்பட்டே மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதுவே அரசின் தற்போதைய நிலைப்பாடாகும் என்றார்.

இதன்போது மற்றுமொரு கேள்வியை எழுப்பிய விமல், புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதாக இருந்தால் அது பற்றி பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படவேண்டும். அரசியலமைப்பு சபையில் விவாதம் நடத்தப்படாத நிலையில் அரசமைப்பு தயாரிப்பு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதா என வினவினார்.

சில கட்சிகள் தமது யோசனைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அத்துடன், புதிய அரசமைப்பு தொடர்பில் இன்னும் ஒரு ஷரத்தேனும் எழுதப்படவில்லை. கட்சிகளின் யோசனைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவை சபையில் சமர்ப்பிக்கப்படும். எதனையும் ஒழித்து மறைத்து செய்யப்போவதில்லை. பகிரங்கமாக ஊடகங்களின் முன்னால் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 13 ஆவது திருத்தச்சட்டம் போதுமானது அல்ல அதற்கு அப்பால் செய்யவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷதான் முதன்முதலில் கருத்து வெளியிட்டிருந்தார் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட விமல் வீரவன்ச 13 பிளஸ் என மஹிந்த ராஜபக்‌ஷ கூறியது சமஷ்டி தீர்வை அல்ல. உங்கள் அரசுதான் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலுக்கமைய சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவர முயற்சிக்கிறது எனக் குற்றஞ்சாட்டினார்.