அ.தி.மு.க. மூத்த தலைவர்களை சந்தித்து பேச விரும்பும் சசிகலா- புதிய வியூகம் கை கொடுக்குமா?

166 0

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இதன் மூலம் இருவருக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் சசிகலாவும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை தான் விரைவில் சரிசெய்து விடுவேன் என்று கூறிக் கொண்டு அவர் அ.தி.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து வருபவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா நேற்று சந்தித்து பேசினார். இது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம் சசிகலா அதிரடி அரசியலுக்கு தயாராகி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் தற்போது நடைபெறும் பிரச்சினைகள் பிடிக்காமல் ஒதுங்கி இருக்கும் முன்னணி நிர்வாகிகள் பலரையும் போனில் அழைத்து பேசி வருவதாக கூறப்படுகிறது. அப்போது சின்னம்மா உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று கூறுகிறார்கள். இதற்கு ஒருசிலர் சம்மதம் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இப்போதைக்கு சந்திக்க விரும்பவில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் பலர் தெறித்து ஓடுவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் மனம் தளராமல் சசிகலாவும், அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வினரை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலருடன் ரகசிய பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜெயலலிதா இருந்தவரையில் அ.தி.மு.க.வில் தவிர்க்க முடியாத சக்தியாகவே இருந்து வந்த சசிகலா அவரது மரணத்துக்கு பிறகு பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். தற்போது அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருக்கும் அவர் மீண்டும் அ.தி.மு.க. தலைமை பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக சுற்றுப்பயணம், ரகசிய பேச்சுக்கள் என காய்களை நகர்த்தி வந்த அவர், அ.தி.மு.க.வில் உள்ள பழைய நிர்வாகிகளையும் முத்த தலைவர்களையும் சந்தித்து பேசி அவர்கள் மூலமாக கட்சிக்குள் தனது செல்வாக்கை நிலைநாட்டி விட வேண்டும் என்று புதிய வியூகத்தை வகுத்துள்ளார். இது கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.