பசுமை பூமி திட்டத்தின் 71 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன

254 0

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் பசுமை பூமி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அக்கரபத்தணை ஹொல்புரூக் ஊட்டுவில் பெங்கட்டன் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட காணி உரிமையுடனான ஊட்டுவள்ளிபுரம் கிராமம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் இன்று வியாழக்கிழமை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளுடனான 150 வீட்டுத் தொகுதிகளை கொண்ட ஊட்டுவள்ளி கிராமத்தின் முதற்கட்டமாக 71 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.

7 பேர்ச்சஸ் காணியில் 550 சதுர அடியில் இரண்டு அறைகள், சமையலறை, வரவேற்பறையுடன் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் “பசுமை பூமி” திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது காணி உறுதி பத்திரம் வழங்குவதன் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றதோடு, பயனாளிகளுக்கு மரக்கன்று மற்றும் வீட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ இராதாகிருஸ்னன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எம். திலகராஜ் கே.கே.பியதாச உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.