இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள்

450 0

இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள், சொந்த காணிக்கு உரித்துடையவர்களாகும் பொன்னான நாள் இன்று என மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஊட்டுவள்ளி கிராமத்தை திறந்துவைத்து காணி உறுதி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் முதல்கட்ட தொகுதியாக 71 புதிய வீடமைப்பு திட்டங்களை திறந்துவைத்து பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரமும் தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எமது கோரிக்கைகளுக்கு அமைய மலையக மக்களுக்கு ஏழுபேர்சஸ் காணியுடனான தனிவீடும், காணி உறுதியும் வழங்குவதாக உறுதியளித்தவாறு இன்று ஜனாதிபதியினால் காணி உறுதி வழங்கப்பட்டுள்ளது.

இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் மலையக மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். அதே போல எதிர்வரும் காலங்களிலும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தவும் எமக்கும் உங்களின் ஆதரவு கிடைத்தால் மலையக மக்கள் அனைவருக்கும் காணி உறுதி பெற்றுக்கொடுப்பேன்.

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்கஷவுடன் இணைந்து இருந்தேன். ஏனெனில் மலையகத்தில் இருந்த பேய்களிடம் இருந்து என்னை பாதுகாதுக்கொள்ளவே என்றார்.