மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற்திறன் அபிவிருத்தி திட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

287 0

ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற்திறன் அபிவிருத்தி திட்ட அலுவலகம் மட்டக்களப்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடனும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும், அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற் திறன் அபிவிருத்தி திட்ட அலுவலகம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ரொசேரியன் வீதியில் குறித்த அலுவலகம் நேற்று  திறந்துவைக்கப்பட்டது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபை அமைச்சர் மகிந்த சமரசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன் அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்சன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பல்வேறு தரப்பினரும் இதன்போது கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற்துறை திறன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், இலங்கையின் சுற்றுலாத்துறையினை பலப்படுத்துவதற்காக நிதியுதவியாகவும், தொழில்நுட்ப உதவியாகவும் 1.6 பில்லியன் ரூபாவினை அவுஸ்ரேலிய அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பில் நேற்று  திறந்துவைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற்திறன் அபிவிருத்தித் திட்ட அலுவலகம், மட்டக்களப்பினை தலைமையகமாக கொண்டு அம்பாறை, திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களை ஒருங்கிணைத்து சர்வதேச மற்றும் தேசிய தொழிற்பயிற்சி நிபுணர்கள் குழுவினை உள்ளடக்கி செயற்படவுள்ளது.

குறித்த மாவட்டங்களில் உள்ள வர்த்தக துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நான்கு வருடங்கள் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல் உட்பட வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தல் உட்பட பல்வேறு செயற்றிட்டங்களை இதன் ஊடாக பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இயற்கை வனப்புமிக்க இலங்கையின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் பயணிகளின் தேவையைப் பூர்த்திசெய்யக்கூடிய விதத்தில் சுற்றுலாத்துறையில் இணைந்துள்ளவர்களுக்கும் எதிர்கால சேவையாளர்களுக்கும் பயிற்சிகளும் ஆலோசனைகளும் இதன்மூலம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.