பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டத்தொடரில், இலங்கை பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படவுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும், பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை, ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை, உக்ரேன், அயர்லாந்து, ஜோர்தான், எல்சால்வடோர், ஜேர்மனி, ருவாண்டா, மைக்ரோனேசியா ஆகிய நாடுகளில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில் இலங்கை தொடர்பான மீளாய்வு எதிர்வரும், பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவது தொடர்பான அனைத்துலகப் பிரகடனத்தை நாடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றன என்பது குறித்து இந்த கூட்டத்தொடரில் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 23 அனைத்துலக சுதந்திர நிபுணர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடனும், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தொடர் தொடர்பாக மார்ச் மாதம் 6ஆம் திகதி அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

