சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது என்று, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் கிடைத்துள்ளதாகவும், நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டே உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில், நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, குறுக்கு கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான பரீட்சை நிறைவடைந்துள்ளதாக கூறினார்.
எனினும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கின்ற வடக்கைச் சேர்ந்த அரசியல்வாதிகள், குறித்த பரீட்சையில் சித்தியடையாவிட்டால் பரவாயில்லை எனவும், அரசியல் ரீதியில் நியமனத்தை பெற்றுதருவதாகவும் அரசியல்வாதிகள் சிலர் கூறிவருவதாக கூட்டிக்காட்டினார்.
அரசியல்வாதிகள் சிபாரிசு செய்தால், இந்த நியமனம் கிடைக்குமா என சாள்ஸ் நிர்மலநாதன், கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாகவும், நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டு அதில், புள்ளிகள் எவையும் இடப்படாது எனவும் கூறினார்.
வேலை செய்வதற்கான திறமை உள்ளிட்ட விவகாரங்களே பார்க்கப்படும் எனவும், இந்தப் பரீட்சையில் சித்தியடையாத எவரும் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படமாட்டார்கள் எனவும் கூறினார்.

