தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராடத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு சிங்கள மக்களும் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் , பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாந்து ஆகியோர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தென்னிலங்கையில் உள்ள மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இனிவரும் காலத்தில் இணைந்துகொள்வார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டம் நியாயமானது எனவும், எனவே, இவர்களின் காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் நேற்று எட்டாம் நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர்கள் தெரிவித்தனர்


