ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் இல்லையாம்!

325 0

இலங்கைக்கு எதிராக மற்றொரு யுத்தக் குற்றச்சாட்டு பிரேரணையொன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. அவ்வாறு எந்த ஒரு பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவோ அதனை பின்போட இலங்கை முயற்சி மேற்கொள்ளவோ இல்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.
இலங்கைக்கு பாதகமாக மற்றொரு பிரேரணை கொண்டுவரப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதனை பின்போட வெளிவிவகார அமைச்சு முயல்வதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இவை முற்றிலும் பொய்யான தகவலாகும்.இலங்கைக்குக்கு எதிராக சர்வதேச சமூகம் எந்த பிரேரணையும் கொண்டுவர முயலவில்லை.மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு பாதகமான எந்த விடயமும் இடம்பெறாது.அதனை உறுதியாக கூற முடியும்.

மார்ச் மாத முதல்வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா மனித உரிமை அமர்வில் பங்கேற்று கடந்த காலத்தில் இலங்கை மேற்கொண்ட விடயங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுவார். ஜெனீவாவின் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதிகமானவற்றை இலங்கை நிறைவேற்றியுள்ளது.நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதயசுத்தியுடன் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவை வழங்கி வருகிறது.நாம் முன்னேற்றகரமாக மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் நற்பெயர் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக வேறு பிரேரணைகள் கொண்டுவரப்படுமென நம்ப முடியாது என்றார்.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட இருக்கும் பிரேரணையை பின்போடுவது குறித்து பேச அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அவர் நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்க இருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்தி குறித்த வினவியதற்கு பதிலளித்த அவர்:

இந்த விடயம் தொடர்பில் அமெரிக்காவுடன் பேசுவதானால் வெளிவிவகார அமைச்சர் தான் அங்கு செல்ல வேண்டும்.அமைச்சர் சுசில் செல்ல தேவையில்லை.இதில் உண்மை கிடையாது என்றார்.