கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து மௌனம் காக்கும் பாதுகாப்பு அமைச்சு! – சம்பந்தன் விசனம்

579 0

தமது நிலத்தை விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தி, விமானப்படை முகாமின் முன்பாக எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் கேப்பாப்புலவு மக்கள், இன்று மாலைக்குள், தமது பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால், உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சு தமது கோரிக்கை குறித்து எந்தப் பதிலையும் வழங்காதிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விசனம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு இனியும் காலங்கடத்தாது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து நான் நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்து 4 நாட்கள் கடந்து விட்டபோதும் ஆக்க பூர்வமாக எவையும் மேற்கொள்ளப்படவில்லை. கேப்பாப்புலவு மக்களின் நியாயபூர்வ கோரிக்கை தொடர்பில் கடந்த வியாழக்கிழமை காலையில் நாடாளுமன்ற உறுப்பின் சாந்தி சிறிஸ்கந்தராஜா போதிய ஆதாரங்களுடன் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் நான் உடனடியாகவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். அது தொடர்பில் உரிய அறிவித்தல்களில் காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம் . எனவே உடனடியாக ஆராய்ந்து சீர் செய்வதாக வாக்களித்தார். எனினும் இதுவரைக்கும் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை வேதனைக்குரியது. மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோடு தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

அவரைத் தொடர்பு கொள்ள முடியாதமைக்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்தபோது அவர் சுகயீனம் காரணமாக ஓய்வில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எது எவ்வாறாயினும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவேண்டும். இது குறித்து இன்றைய தினம் சரியான நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்கின்றோம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.