அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் சித்திரவதை செய்ய முடியாது – சட்டத்தரணி ரட்ணவேல்

296 0

அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் சித்திரவதை செய்யப்பட முடியாது என தெட்டத்தெளிவாக சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சட்டங்கள் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பலனும் அளிப்பதில்லை என சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார் .

கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் சித்திரவதைப்படுத்தப்படுவது என்பது இன்று நேற்றல்ல நெடுங்காலமாகவே இது நடந்திருக்கின்றன. எப்பொழுதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ அப்பொழுதெல்லாம் தமிழ் மக்கள் கொடூரமாக சித்திரவதை படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களை வேற்றாராக பார்க்கின்ற சுபாவம் சிங்கள ஆதிக்கம் பொலிஸாரிடமும், இராணுவத்திடமும் இருந்திருக்கின்றது.

உதாரணமாக பன்நெடுங்காலமாகவே அதாவது யுத்தம் இல்லாது, சமாதானம் இருந்த காலத்திலேயே 1950, 1960 களில் வடக்கிற்கும் தெற்கிற்குமாக இருந்த ஆனையிறவு நிலப்பரப்பில் சோதனைச்சாவடி அமைத்து கடத்தல்களை தடுப்பதென்ற போர்வையில் வருகின்ற தமிழ் மக்களை மறித்து பலவிதமாக துன்புறுத்தல் நடந்திருக்கின்றது.

எண்ணிக்கை அளவில்லாத இளைஞர்கள் மட்டுமல்ல வயதானவர்கள் கூட பொலிஸாரால் , இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு தமிழ் மக்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவர்கள் சிறையில் வைக்கப்பட முன்னர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டன. இதனை பெறுவதற்காகவே சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார்கள்.

சில வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பல வழக்குகளில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அனுமதிக்கப்பட்டு தண்டனை பெற்ற சம்பவங்களும் இருந்திருக்கின்றது.

ஆனால் சட்டத்திற்கும் , நியாயத்திற்கும் உட்படாமல் சித்திரவதைகள் நடந்திருக்கின்றன. இது ஆதார பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்டாலே ஒருவர் சித்திரவதைக்குட்படுத்தப்படுவர் என்பது நிச்சயம். அத்துடன் தமிழ் பெண்கள் பாலியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான அதிக சம்பவங்கள் வெளியே வருவதில்லை.

உதாரணமாக நானே கையாண்ட ஒரு வழக்கு 1996, 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னாருக்கு இடம்பெயர்ந்து வந்திருந்த இரண்டு யுவதிகளை பள்ளிமுனை பொலிஸ் நிலையத்தில் வைத்தே பொலிஸாரும் , கடற்படையினரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டது.

இத்தகவல் நிருபராலும், அப்போதைய பேராஜராக இருந்த இராஜப்பு ஜோசப் அவர்களாலும் வெளிக்கொண்டு வரப்பட்டது. அவர்களை சித்திரவதை செய்தது மட்டுமல்லாமல் தற்கொலை குண்டுதாரிகளாக சித்தரித்து நீதிமன்றிலே பாரப்படுத்தி விளக்கமறியலில் இட்டார்கள். பின்னர் அவ் நீதிமன்றிலே துன்புறுத்தியவர்களை அடையாளம் காணப்பட்டு அவர்கள் குற்றவாளிகளாக மன்னார் நீதிமன்றிலே அடையாளம் காணப்பட்டார்கள்.

சமீபகாலத்தில் வடகிழக்கில் பல இடங்களில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என கூறி கைது செய்யப்பட்டு அவர்கள் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இரணைமடு முகாம் அது ஒரு சித்திரவதை முகாம் தான். தற்சமயத்தில் கூட அங்கே சித்திரவதைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இவைகள் வழக்குகள் மூலம் சில விடயங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம்.

எனவே சித்திரவதை இங்கே ஒன்றும் புதிதல்ல. பாரிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. யார் அதனை விசாரிப்பது? அதாவது இராணுவத்தினரும், பொலிஸாரும் செய்த விடயங்களை விசாரிக்க கூறுவது அவர்களையே, அதாவது குற்றம் செய்தவர்களையே விசாரணை செய்ய நியமிக்கப்படுவார்கள். அது எவ்வாறு முடியும் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

சித்திரவதை என்பது உலக அளவில் தடை செய்யப்பட்ட ஒரு விடயம். எந்த சந்தர்ப்பத்திலும் சித்திரவதை செய்யப்படாமல் இருப்பது எங்களுடைய அடிப்படை உரிமை என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்திய காலத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் சித்திரவதை செய்யப்பட்ட முடியாது என தெட்டத்தெளிவாக சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சட்டங்கள் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பலனும் அளிப்பதில்லை.

பொலிஸாரும், இராணுவத்தினரும் , அரசியல் வாதிகளும் இதை பற்றி சிந்திப்பதுமில்லை. தமிழ் மக்கள் என்றாலே அவர்களை அதிகார பூர்வமாக சித்திரவதைப்படுத்த கூடியவர்கள். அது வடகிழக்கில் உள்ளவர்கள் அத்துடன் மலையகத்திலுள்ளவர்களுக்கும் அது பொருந்தும்.

எனவே இவை அனைத்தையும் பார்க்கும் போது இலங்கை நாடு என்பது சட்டம் சரிசமமாக, நியாயமாக பிரயோகிக்கபடுவதில்லை. தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் சிங்கள மக்களுக்கு என்று ஒரு சட்டம் என்றே இங்கு காணப்படுகின்றது.

சித்திரவதையின் சரித்திரம் இதுதான். இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாக சிங்களவர்கள் சிங்கள மக்கள் , தமிழ் மக்கள் மீதுள்ள காழ்ப்புணர்வு தான் இந்த சித்திரவதையை மேற்கொள்ள தூண்டியிருக்கின்றது. இதற்கு சட்டமோ, நீதிமன்றங்களோ தமிழ் மக்களுக்கு இல்லை என்பது தான் வெளிப்படையாக தெரிகின்றது என மேலும் தெரிவித்தார்.