இலங்கை தமிழர்கள் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

243 0

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). லண்டன் சென்ற அவர் அங்கு இலங்கை தமிழர்களான முகமது இம்ரான் (32), சுகனந்தன் (32), முரளிதரன் (44), பிரகாஷ் (25), சந்திரமோகன் (34) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

போலியான ஏ.டி.எம். அட்டைகளை அவர்கள் தயாரித்து 2014-ம் ஆண்டு சென்னை வந்தனர்.

சென்னை ஏ.டி.எம். மையத்தில் போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இது தொடர்பான வழக்கில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 6 பேரையும் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்கள் சி.பி.சிஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 6 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 303 போலி ஏ.டி.எம். அட்டைகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

2015-ம் ஆண்டு 6 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில் சந்திரமோகன், முகமது இம்ரான் ஆகியோர் தப்பி சென்றனர். சுகனந்தன், முரளிதரன், பிரகாஷ் ஆகியோர் நேபாள நாட்டு வழியாக தப்பி சென்ற போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செந்தில்குமார் சென்னையிலேயே இருந்தார்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 11வது கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷ் தன்னுடைய தீர்ப்பில், செந்தில்குமார், சுகனந்தன், பிரகாஷ், முரளிதரன் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அரசு தரப்பு வக்கீல்களாக மேரிஜெயந்தி, எட்விக் ஆகியோர் ஆஜராகினர். முகமது இம்ரான், சந்திரமோகன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.