ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் – இதுவரை 895 காளைகள் பதிவு

280 0

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படியும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு நடத்தப்பட உள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் நல்ல உடல்நலத்துடனும், பாதுகாப்புடனும் உள்ளனவா என கால்நடை பராமரிப்புத்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முறையாக பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, அவனியாபுரத்தில் நாளை நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இதற்காக அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள குருநாதன் கோவில் முன்புள்ள திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் தகுதியான காளைகளை தேர்வு செய்யும் பொருட்டு, மருத்துவ குழுவினர் அவனியாபுரத்தில் கடந்த 3 தினங்களாக முகாமிட்டு பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

சோதனை செய்யப்பட்ட காளைகளுக்கு மருத்துவ குழுவினர் தகுதி சான்றிதழ்களை வழங்குகின்றனர். இந்த சான்றிதழ்களை காளை உரிமையாளர்களும், விழா நிர்வாகிகளும் ஜல்லிக்கட்டு நடத்தும் அதிகாரியிடம் காண்பித்து பதிவு செய்து வருகிறார்கள். இதுவரை சுமார் 895 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.

இதுபோல், மாடு பிடி வீரர்களுக்கும் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாடுபிடி வீரர்களும் ஆர்வத்துடன் தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்.

அவனியாபுரத்தை அடுத்து, பாலமேட்டில் 9-ந் தேதியும், அலங்காநல்லூரில் 10-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

இந்த 2 ஊர்களிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் உரிய பரிசோதனைக்கு பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன.