இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் தற்சமயம் இடம்பெறுகின்றன
இதனை முன்னிட்டு கொழும்பு கோட்டை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
7 ஆயிரத்து 782 படையினர்களின் பங்கேற்புடன் சுதந்திர தின பேரணி இடம்பெறவுள்ளது.
நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
சவாலை வெற்றி கொள்ள துணிச்சலுடனும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட சுதந்திர தினத்தில் உறுதி பூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்து வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அபிமானம் மிக்க ஓர் தேசமாக, ஒன்றிணைந்த இலங்கை மக்களாக எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்வதற்காக சுயநலத்தை ஒதுக்கி விட்டு, நாட்டிற்காகப் பாடுபட்டு உழைப்பதே எமக்குள்ள சவாலாகும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

