அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது

246 0

மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரிகள் நீக்கப்பட்ட போதிலும், அதன் பிரதிபலன்கள் மக்களை இதுவரை சென்றடையவில்லை.

சில அரிசி மொத்த விற்பனையாளர்களின் மோசடிச் செயற்பாடுகள் காரணமாகவே மக்களுக்கு இதன் பிரதிபலன்களை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்த அரிசி விற்பனையாளர்கள் தமது இருப்பிலிருந்த அரிசியை பதுக்கியிருப்பதால் அரிசியின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே வர்த்தகர்கள் அரிசியை பதுக்காது வரி குறைப்பின் பிரதிபலனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

மோசடியான முறையில் செயற்படும் அரிசி வர்த்தகர்கள் நியாயமாக நடந்துகொள்வதற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ எனவும் நிதியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.