இலங்கை அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பை மீறியதாக சுவிஸ் மீது ஐரோப்பிய நீதிமன்றம் குற்றச்சாட்டு!

333 0

விடுதலை புலி உறுப்பினர் குடும்பம் ஒன்றை இலங்கைக்கு திருப்பி அனுப்பியதன் ஊடாக, அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பினை சுவிட்சர்லாந்து அரசாங்கம் மீறியுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. 2013 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பத்தின் மனு நிராகரிக்கப்பட்டு, 2013ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டிருந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட அவர்கள் 13 மணித்தியாலங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதனையடுத்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து தப்பியிருந்தார். இதேபோன்று மேலும் இருவர் நாடு கடத்தப்பட்ட நிலையில் சித்திரவதைகளுக்கு உள்ளானதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் அகதிகள் தொடர்பில் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் இலங்கையிலிருந்து வரும் அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றும், சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படுவோர் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் அந்த உடன்பாடுகளை மீறி இன்றும் நாடு கடத்தப்படுவோர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கடந்த வருடத்தில் 5000 இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. 1613 இலங்கை புகலிட கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக வீசா வழங்கப்பட்டுள்ளது. எனினும் 1316 பேரின் கோரிக்கைகள் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் சாதகமாக கையாளுமாக இருந்தால், அந்த நாட்டில் புகலிடம் கோரியுள்ள இலங்கை அகதிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.