‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற வேண்டும்’, என்று விலங்குகள் நல வாரிய செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.
‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற வேண்டும்’, என்று விலங்குகள் நல வாரிய செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார். இது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடக்கவேண்டும் என்று நடந்த போராட்டத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 23-ந்தேதி தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனுசிங்வி, அரியமா சுந்தரம், ஆனந்த் குரோவர் ஆகியோர் நேற்றுமுன்தினம் ஆஜராகி, ‘இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் ‘க்யூபா’, ‘பியாபோ’ போன்ற விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் ஆஜராக வந்துள்ளோம்’, என்றனர்.
‘தமிழக அரசு தற்போது ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது’, என்றும் தங்கள் முறையீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கலான மனுக்கள் வருகிற 30-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளன.
ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசின் சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதையடுத்து தமிழக அரசின் அவசர சட்டமும், அதனைத்தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட நிரந்தர சட்ட மசோதாவும் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் நிரந்தர தீர்வாக அமையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் சார்பில் வழக்கு தொடர எடுக்கும் முயற்சிகள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில் விலங்குகள் நல வாரிய அதிகாரியே அந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார். இது குறித்து விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் எம்.ரவிக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜல்லிக்கட்டு விஷயத்தை பொறுத்த அளவில் விலங்கு நல வாரியத்தின் அனுமதி இருந்தால் மட்டுமே வழக்கு தாக்கல் செய்யவேண்டும். விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசின் நிரந்தர சட்ட மசோதாவுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.
எனவே தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிராக விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கு போட்டிருந்தால் அதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ஒருவேளை வழக்கு தொடருவதாக எண்ணம் இருக்குமேயானால் சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்.இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
மாணவர்கள்-இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற ஆவலில் இருந்த தமிழக மக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல வாரிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது வருத்தத்தை அளித்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவதில் மறுபடியும் சிக்கல் நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்தநிலையில் விலங்குகள் நல வாரியத்தின் செயலாளரின் அறிக்கை ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்று தெரிகிறது.

