நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளது- கயந்த கருணாதிலக

239 0

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் கயந்த கருணாதிலக, சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை தடுப்பதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறினார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் இருந்த நெல்லில் 90 ஆயிரத்து 958 மெட்ரிக் தொன் நெல், அரிசியாக்கப்பட்டு சந்தைப்படுத்துவதற்காக மாவட்ட மட்டத்தில் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்க, கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கா ச.தொ.ச நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நெல் தொகையானது, அரிசியாக்கப்பட்டு, ச.தொ.ச வினூடாக ஒரு கிலோகிராம் 76 ரூபாய் வீதம் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், தனியார் நெல் ஆலை உரிமையாளர்களின் மூலம் குறித்த நெல் அரிசியாக்கப்பட்டு,சந்தைக்கு விற்பனை செய்யப்படவில்லை என்று அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் இருக்கும் நெல் கையிருப்பை, லங்கா ச.தொ.ச நிறுவனம், தனியார் நெல் ஆலை உரிமையாளர்களின் ஊடாக அரிசியாக்கப்பட்டு முறையான செயற்றிட்டமொன்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தற்போது நெல் வழங்கப்பட்டு, அதனை சந்தைக்கு விநியோகிக்காமல் இருக்கும் நெல் ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக விசேட செயற்பாட்டு அமைச்சரின் தலைமையில், அமைச்சரவை உப குழுவொன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளின்படி, 10 ஆயிரம் மெக்ரித்தொன் அரிசியானது, இந்தோனேஷியா அரசாங்கத்தின் மூலம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

சந்தையில் அரிசி விலை உயர்ந்து காணப்பட்டால், இந்தோனேஷியா, வியட்நாம் உட்பட மிகவும் அருகிலுள்ள நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து துரிதமாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் அமைச்சரவையிர் கவனம் செலுத்தப்பட்டது என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.