டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமா கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
புஞ்சிபொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த திஸ்ஸ விதாரண, மழை நீரை சேமிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என்று கூறினார்.
நாட்டில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும், கடந்த ஆண்டில் டெங்கு நுளம்பின் தாக்கம் ஓரளவு கூடி, குறைந்து காணப்பட்டாலும், இவ்வருடம் ஆரம்பம் முதல் அதன் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டினார்.
தற்போது மழை காலம் இல்லாவிட்டாலும் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும், தேங்கி நிற்கும், சுத்தமான நீர்நிலைகளிலும் டெங்கு நுளம்பு பெருகுவதாக திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நீரை, உரிய முறையில் அகற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள தவறியுள்ளதாக குற்றம் சுமத்திய திஸ்ஸ விதாரண, டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளதாக கூறினார்.

