அமைச்சர் சுவாமிநாதனின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச ஊடகம் அதிருப்தி

362 0

பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உரிய விளக்கங்களை வழங்க தவறி இருப்பதாக த ஏசியன் ட்ரிபியுன் ஊடகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 65 ஆயிரம் பொருத்துவீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் அமைச்சரின் பொறுப்பின் கீழ் உள்ளது.

இது தொடர்பில் ஃப்ரான்சை தளமாக கொண்ட ஆர்சிலர் மிட்டால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

எனினும், பொருத்துவீடுகளை நிர்மாணிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன.

21 லட்சம் ரூபாய் செலவில் இரும்பு மற்றும் பீ.வீ.சி குழாய்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் இந்த வீட்டுத் திட்டம் தமிழ் மக்களுக்கு பொருத்தமற்றது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த வீட்டுத்திட்டத்தை பலவந்தமாக திணிப்பதற்கு அமைச்சர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்து, வடக்கில் குறித்த வீடுகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

எனினும், உண்மையில் அவ்வாறான அமைச்சரவை அனுமதி எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று ஏசியன் ட்ரிபியுன் செய்தி ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த வீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக, அவரது அமைச்சின் செயலாளரை அந்த பதவியில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீட்டுத் திட்டத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டமைக்காக யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதியையும் இடமாற்றம் செய்ய அமைச்சர் முயற்சி எடுத்ததாகவும் அந்த ஊடகம் குற்றம் சுமத்தி இருக்கிறது.

இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சரிடம் இருந்து மின்னஞ்சல் ஊடான பதில்களையும் குறித்த ஊடகம் பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி, 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றமை உண்மை என்றும், எனினும் இந்த வீட்டுத்திட்டத்துக்காக ஆர்சல் மிட்டால் நிறுவனத்துடன் இன்னும் ஒப்பந்தம் எதுவும் செய்துக் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், தமது செயலாளர் வேறொரு அமைச்சுக்கு மாற்றப்பட்டமையானது ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையிலேயே இடம்பெற்றதாகவும், பாதுகாப்பு தளபதி ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.