பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் உத்தரவுக்கமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
பிள்ளையானின் உத்தரவுக்கமையவே சாந்தன் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தினைக் கொலை செய்தார் என காவல்துறையின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக எந்தவித சாட்சிகளும் இன்றி தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உச்சநீதிமன்றில் பிள்ளையான் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நீதிமன்றத்திற்கு அளித்துள்ள தகவல்களை ஏற்றுக்கொள்ளமுடியாதென பிள்ளையான் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி தனது கடும் எதிர்ப்பினை வெளியிட்டார்.
மேலும், எந்தவொரு விசாரணைகளுமின்றி பிள்ளையான் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பிள்ளையான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக நீதிமன்றத்தில் பிள்ளையான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

