சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும், ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைக்கும் எதிரான கறுப்பு ஜனவரி இன்று கொழும்பில் அனுட்டிக்கப்பட்டது.
இதன்போது, ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி தபால் தலையும் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
அத்துடன், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் மரணத்துக்கு அரசாங்கம் நீதி வழங்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பெருமளவான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டதுடன், ஊடவியலாளர்களின் படுகொலைக்கு நீதி வழங்கப்படவேண்டுமென்பதையும் வலியுறுத்தியுள்ளளனர்.

