உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியமை – சந்தேக நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை இரத்துச் செய்தார் இளஞ்செழியன்!

447 0

ஆனையிறவு கொம்படி வெளிப் பகுதியில், எம்ஐ24 உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படையினர் பலியாவதற்குக் காரணமாக இருந்தார் என விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலத்தை யாழ்ப்பாண மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இரத்துச் செய்துள்ளார்.

1999ஆம் ஆண்டு டிசெம்பர் 17ஆம் நாள், ஆனையிறவு அருகேயுள்ள கொம்படி வெளியில் எம்.ஐ-24 உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தி 4 விமானப்படையினரின் மரணத்துக்குக் காரணமாக இருந்தார் என மானிப்பாயைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்ற முன்னாள் போராளி மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2013ஆம் ஆண்டு குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு, பூசா சிறைச்சாலையில் வைத்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்தார்.

சந்தேகநபரின் முகத்தில் சவரம் செய்யும் கருவியினால் கீறிக் காயப்படுத்தியே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதாக சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்கில் வேறு சாட்சியங்களை முன்னிலைப்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கைவிடுத்திருந்தது.

இதற்கென வழங்கப்பட்ட ஒருவார கால அவகாசத்துக்குள் சட்டமா அதிபர் திணைக்களம் எந்தவொரு அறிக்கைகளையும் தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில் வழக்கு எதிர்வரும் 7ஆம் நாள் தள்ளிபோடப்பட்டுள்ளது. அன்றைய நாள் சந்தேக நபர் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.