ஊழல் வழக்குகளை விசாரிக்க இரண்டு மேல் நீதிமன்றங்கள்-சரத் அமுனுகம

253 0

download (8)கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடி, அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய இரண்டு மேல் நீதிமன்றங்களை ஒதுக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான வழக்குகளை துரிதமாக முடித்து தீர்ப்பை வழங்குவதற்காக குற்றவியல் நீதி விசாரணை ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அண்மையில், அமைச்சரவையில் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார்.

இதனை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலும் சட்டமா அதிபர் இதுவரை தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது தாமதமாகி வருவதால், தற்போது இயங்கி வரும் மேல் நீதிமன்றங்களில் இரண்டு மேல் நீதிமன்றங்களை இந்த விசாரணைகளுக்காக ஒதுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.

இவ்வாறான வழக்கு விசாரணைகளை நடத்த நீதி விசாரணை சபை போன்ற விசேட நீதிமன்றங்களை ஏற்படுத்த தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகைகள் இல்லை என நீதியமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் அப்படியான விசேட நீதிமன்றத்தை ஏற்படுத்தி, வழக்குகளை விசாரித்தால், அது அரசியலமைப்புச் சட்டத்தின் 12வது பந்திக்கு அமைய அரசியல் பழிவாங்கல் என கருதப்படும் என சட்டவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.