கொழும்பு துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர் வருகை

254 0

06 - NEWS - 20-01-2017 (1)அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது.

வருகைதந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் அதன் கட்டளை அதிகாரி கொமான்டர் ஜான் டி கெயினி, மேற்கு கடற்படைக் கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது உத்தியோகபூர்வ சந்திப்பு குறித்து இரு தரப்பினர்களுக்கடையிலும் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
விமான எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, மற்றும் தரை இலக்குகளைத் தாக்கும் பலநோக்கு போராயுத வசதிகளைக் கொண்ட இந்த நாசகாரி கப்பல், பேர்ள் ஹாபரில் இருந்து இயங்கி வருகிறது.

தற்போது இந்த நாசகாரி, இந்தோ-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கும் அமெரிக்க நாசகாரி கப்பலின் பணிக்குழுவினர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளிலும் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.