பெண்களுக்கான விழிப்புணர்வு இன்று முதல் ஆரம்பம்

248 0

womenஇலங்கை அரசியலில், பெண் பிரதிநிதிகளின் விகிதாசாரத்தை அதிகரிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தினை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் முன்னெடுக்கவுள்ளது.

இந்தச் செயற்றிட்டம், இன்று (18) ஆரம்பமாகி, பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பிரதான நிர்வாகி, கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். இச்செயற்றிட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “எல்லா ஜனநாயக நாடுகளிலும் அரசியலில் பிரவேசிக்கும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்களின் எண்ணிக்கையினை விடக் குறைவானதாகும். அதனால், அநேகமான நாடுகளில் அரசியலில் பெண்களின் சதவீதத்தினை அதிகரிப்பதற்காக ஒதுக்கீட்டு முறையினைப் பயன்படுத்துகின்றனர். அதனடிப்படையில் இலங்கையில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பது தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கு, 1946ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் சட்டத்துக்கு இணைக்கப்பட்ட (கலப்பு உறுப்பினர் பிரதிநிதித்துவ முறை – mix member representative system) திருத்தச் சட்டம் மற்றும் (25 சதவீத பெண் பிரதிநிதித்துவம்) திருத்தச்சட்டம் என்பன மிகவும் முக்கியமானவையாகும்.

இதனூடாக எதிர்வரும் உள்ளூராச்சிமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் விசேட மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுக்களிடையே குறிப்பிட்டுக் கூறக்கூடியளவில் காணப்படவில்லை.

குறிப்பிட்ட தேர்தல் முறைமை தொடர்பாக மக்களின் / பெண்களின் விழிப்புணர்வினை அதிகரித்தல், அரசியல் குடும்பப் பின்னணியின்றி கிராமிய மட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களினூடாகப் பெண்களை அரசியல் செயற்பாடுகளுக்குக் கொண்டுவருதல், பெண் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் போது நீதியான முறையிலும் சமத்துவத்தின் அடிப்படையிலும் தெரிவு செய்யும் தெரிவுமுறையை நோக்கிக் கொண்டு செல்லல் என்பவற்றை இதனூடாக எதிர்பார்க்கின்றோம்” என்றார்.